நம் தமிழ்
Monday, May 13, 2013
Wednesday, September 19, 2007
கட்டுரை எழுதுதல்
கட்டுரையில் அமைய வேண்டியவை
1. முன்னுரை
2. பொருளுரை எழுதுதல்
3. முடிவுரை எழுதுதல்
மேற்கண்டவாறு கட்டுரையின் கூறுகள் அமைந்தால் அது சிறந்த கட்டுரையாக அமையும். |
Tuesday, May 22, 2007
எச்சவினை
|
எச்சவினை முற்றுவினை / வினைமுற்று பொருள் முடிந்து நிற்கும் சொல்
எச்சவினை பொருள் முற்றுப்பெறாமல் எஞ்சி நிற்கும் சொல். இது பொருள் முடிவுபெறுவதற்காய் இன்னொரு சொல்லை எதிர்பார்த்து நிற்கும்.
எச்சவினை வகைகள்: 1.பெயரெச்சம் பெயர்ச்சொல்லைப் பொருள் முடிக்கும் சொல்லாகக் கொள்ளும் எச்சம் பெயரெச்சமாகும்.
2.வினையெச்சம் வினைச்சொல்லைப் பொருள் முடிக்கும் சொல்லாகக் கொள்ளும் எச்சம் வினையெச்சமாகும்.
|
Thursday, October 26, 2006
சிற்றுரை
|
சிற்றுரை எழுதுதல் எப்படி? சிற்றுரை என்பது தனி ஒருவரின் பேச்சு / உரை / சொற்பொழிவு ஆகும். பின்பற்ற வேண்டியவை :
சிற்றுரையில் மேற்கூறிய இந்த ஆறு செய்திகளும் இடம்பெறுதல் வேண்டும். உடல்நலம் பேணுவதின் அவசியம்
(மாதிரிச் சிற்றுரை) பெருமதிப்பிற்குரிய அவைத்தலைவர் அவர்களே! இவ்விழாவின் சிறப்பு விருந்தினர் அவர்களே! விழாவின் ஏற்பாட்டுக்குழு உறுப்பினர்களே! பெற்றோர்களே! பெரியோர்களே! மாணவச் செல்வங்களே! உங்கள் அனைவர்க்கும் எனது முதற்கண் வணக்கம்! இன்று நான் பேசவிருக்கும் தலைப்பு உடலோம்புதலின் அவசியம் ஆகும். உடலோம்புதல் என்றால் என்ன என்பதை முதலில் பார்ப்போம். உடலை நலத்துடன் பாதுகாப்பது உடலோம்பல் ஆகும். நாம் ஏன் உடலைப் பாதுகாக்க வேண்டும்? உடலைப் பாதுகாக்காவிட்டால் உடல் கெட்டு விடும்; நோய்கள் நம்மைத் தாக்கி அழிக்கும். எனவே, நாம் ஒவ்வொருவரும் உடல்நலனைப் பாதுகாப்பது அவசியமாகும். நாம் நம் உடல்நலனை எவ்வாறு பாதுகாக்கலாம்? என்பதைப் பற்றி இப்போது பார்ப்போம். ஆரோக்கியமான உணவுகள், தகுந்த உடற்பயிற்சி, சுகாதாரமான வாழ்க்கைமுறை போன்றவற்றின் மூலம் நாம் நம் உடல்நலனைப் பாதுகாக்க முடியும். முதலில் உணவுமுறைகள் நமக்கு எப்படி ஆரோக்கிய வாழ்வைத் தருகின்றன என்பதைப் பற்றிப் பார்ப்போம். மனிதன் உயிர்வாழ உணவு அவசியம். உணவில்லாமல் ஒருவனால் உயிர்வாழ முடியாது. நாம் பலவகையான உணவுகளை உட்கொள்கிறோம். அவற்றுள் நமக்கு நன்மை அளிக்கும் உணவுகள் பல உள்ளன. உதாரணமாக, காய்கறிகள், பழங்கள், கீரைகள் போன்றவை உடலுக்கு நன்மை தரக்கூடியன. இறைச்சி, கோழி, போன்ற எணணெய்யில் பொறிக்கப்பட்ட உணவுகள் உடலுக்குத் தீங்கு செய்கின்றன. எனவே, உடல்நலனைப் பேண விரும்புவோர் சத்துள்ள நல்ல உணவுகளை உட்கொள்வது நல்லது. இதனால்தான் நமது முன்னோர்கள் “நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்று கூறினார்கள். அடுத்ததாக உடற்பயிற்சி. உடற்பயிற்சி உடல்நலனைப் பாதுகாப்பதற்குரிய சிறந்த வழியாகும். ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வதற்கு உடற்பயிற்சி செய்வது அவசியம். மெதுவோட்டம், நீச்சல்,யோகாசனம் போன்றவற்றை நாம் மேற்கொள்ளலாம். மேலும், காலை, மாலை இருவேளைகளிலும் எளிய நிலையில் உள்ள உடற்பயிற்சிகளைச் செய்வது நல்லது. அதனால்தான் நமது அரசாங்கமும் பள்ளிகளிலும் உயர்கல்வி நிலையங்களிலும் உடற்பயிற்சியைக் கட்டாயப் பாடமாக ஆக்கியுள்ளது. அதுமட்டுமன்றி முதியோர்களுக்கேற்ற மெதுநடை, எளியநிலை உடற்பயிற்சிகள் போன்றவற்றைச் செய்ய ஊக்குவித்து வருகின்றது.எனவே, உடற்பயிற்சி என்பது உடல்நலனைப் பாதுகாக்கும் என்பதால் நாம் அதனைத் தவறாது பின்பற்றுவது அவசியமாகும். இதுபோன்றே ஆரோக்கியமான வாழ்க்கை முறையும் உடலோம்புவதில் பெரும்பங்காற்றுகிறது. “சுத்தம் சுகம் தரும்” என்பார்கள். ஆகவே, நாம் அனைவரும் சுகாதாரமான வாழ்க்கை வாழ வேண்டும். சுகாதாரமான வாழ்க்கை என்பது சுத்தத்தைக் கடைப்பிடிப்பதைக் குறிக்கிறது. நாம் உண்ணும் உணவு, உடுக்கும் உடை, இருக்கும் வீடு என்ற எல்லா நிலையிலும் சுத்தத்தைப் பேண வேண்டும். அசுத்தமான சூழ்நிலை நோயை உருவாக்கும். அதனால்தான் “கூழானாலும் குளித்துக் குடி. கந்தையானாலும் கசக்கிக் கட்டு” என்று முன்னோர் கூறினர். ஆகவே, உடல்நலன் பேண வேண்டுமென்றால் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைக் கட்டாயம மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு மேற்கொண்டால் நம் வாழ்க்கை ஒளிமயமாகத் திகழும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. எனவே, உடல்நலன் பேணுவோர் அனைவரும் சத்துளள உணவுகளை உட்கொள்வதோடு ஆரோக்கியமளிக்கும் உடற்பயிற்சிகளையும் கட்டாயம் மேற்கொள்ள வேண்டும். மேலும், சுகாதரமான வாழ்க்கை முறையையும் பின்பற்றும் போது நமது உடல்நலன் பாதுகாக்கப்படும். ஆகவே, நாம் அனைவரும் வாழ்க்கையை வளமாக்க உடலோம்புவதில் அக்கறை செலுத்துவோம்! இதுவரை எனது உரையைச் செவிமடுத்த உங்கள் அனைவர்க்கும் எனக்கு இந்த அரிய வாய்ப்பினை வழங்கிய ஏற்பாட்டுக் குழுவினருக்கும் நன்றி கூறி எனது உரையை முடிக்கின்றேன். நன்றி! வணக்கம்! |
Saturday, July 08, 2006
தமிழ் கற்போம்!
|
சுவைகள்
நாம் உயிர் வாழ்வதற்கு உணவு தேவை. நம்மால் பலவகையான உணவுப் பொருட்கள் உண்ணப்படுகின்றன. அவ்வாறு உண்பவற்றில் சில நமக்குப் பிடிக்கும். சில நமக்குப் பிடிக்காது. பிடித்த உணவுகளை நாம் அடிக்கடி விரும்பிச் சாப்பிடுகிறோம். இதற்குக் காரணம் அவ்வுணவில் அடங்கியுள்ள சுவையே ஆகும். சுவை என்பதை நாம் `ருசி` என்றும் அழைக்கின்றோம். சுவைகளை நாம் நாக்கின் மூலமே அறிகிறோம். அவ்வாறு நம்மால் உணரப்படும் சுவைகள் ஆறு வகைப்படும். அவை இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு, கசப்பு, கார்ப்பு (காரம்) மற்றும் துவர்ப்பு ஆகும். நாம் உண்ணும் உணவில் இந்த ஆறுவகையான சுவைகளும் இடம்பெறுவது அவசியம். ஆனால், நாம் இவற்றில் சில சுவைகளை மட்டுமே சேர்த்துக்கொள்கின்றோம். சில சுவைகளை நாம் சேர்த்துக்கொள்வதே இல்லை. காரணம் அந்தச் சுவைகள் நாவிற்கு இனிமையைத் தருவதில்லை. அதுமட்டுமல்லாமல் அச்சுவைகளின் மருத்துவக் குணங்களை நாம் அறியாமலும் இருக்கின்றோம். இந்த அறுவகைச் சுவைகளும் உணவில் இருக்க வேண்டும் என்பதால்தான் நம் முன்னோர்கள் `அறுசுவை உணவை`உண்டு வாழ்ந்தனர். அறுசுவை உணவு என்பது இனிப்பு, புளிப்பு முதலான ஆறு வகைச் சுவைகளும் அடங்கியுள்ள உணவைக் குறிக்கும். இவ்வுணவு நமது உடலுக்குத் தேவையான சத்துகளை வழங்குவதோடு உடல்நலனைச் சமமாக வைத்திருக்கவும் உதவுகின்றது. ஆறு வகைப்பட்ட சுவைகளும் நம் உடல் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுகின்றன. இனிப்புச் சுவை தசையை வளர்க்கின்றது. புளிப்புச் சுவை கொழுப்பை வழங்குகிறது. துவர்ப்புச்சுவை இரத்தத்தைப் பெருக்குகின்றது. கசப்புச் சுவை நரம்புகளைப் பலப்படுத்துகின்றது. காரச் சுவை எழும்புகளை வளர்க்கின்றது. இவ்வாறு ஒவ்வொரு சுவையும் நமது உடல் ஆரோக்கியத்திற்கு அவசியமாகின்றது. ஆனால், இன்று நாம் உண்ணும் உணவில் ஒரு சில சுவைகளையே அதிகம் பயன்படுத்துகின்றோம். அதனால்தான் பல நோய்கள் நம்மைத் தாக்குகின்றன. பொதுவாக இனிப்புச் சுவையை அனைவரும் விரும்புகின்றோம். இது தசை வளர்ச்சிக்கு உதவுகிறது. நாம் இனிப்பை அதிகமாகப் பயன்படுத்தும் போது நமது தசைகள் நன்கு வளர்ச்சி அடைந்து உடல்பருமனைத் தோற்றுவிக்கிறது. உடல் பருமனால் நம்மில் பலர் பல துன்பங்களை அனுபவிக்கின்றனர். இவ்வாறான துன்பங்களில் இருந்து விடுதலை பெற வேண்டுமானால் அறுசுவைகளையும் நமது அன்றாட வாழ்வில் பயன்படுத்துவது அவசியமாகும். |