|
சுவைகள்
நாம் உயிர் வாழ்வதற்கு உணவு தேவை. நம்மால் பலவகையான உணவுப் பொருட்கள் உண்ணப்படுகின்றன. அவ்வாறு உண்பவற்றில் சில நமக்குப் பிடிக்கும். சில நமக்குப் பிடிக்காது. பிடித்த உணவுகளை நாம் அடிக்கடி விரும்பிச் சாப்பிடுகிறோம். இதற்குக் காரணம் அவ்வுணவில் அடங்கியுள்ள சுவையே ஆகும். சுவை என்பதை நாம் `ருசி` என்றும் அழைக்கின்றோம். சுவைகளை நாம் நாக்கின் மூலமே அறிகிறோம். அவ்வாறு நம்மால் உணரப்படும் சுவைகள் ஆறு வகைப்படும். அவை இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு, கசப்பு, கார்ப்பு (காரம்) மற்றும் துவர்ப்பு ஆகும். நாம் உண்ணும் உணவில் இந்த ஆறுவகையான சுவைகளும் இடம்பெறுவது அவசியம். ஆனால், நாம் இவற்றில் சில சுவைகளை மட்டுமே சேர்த்துக்கொள்கின்றோம். சில சுவைகளை நாம் சேர்த்துக்கொள்வதே இல்லை. காரணம் அந்தச் சுவைகள் நாவிற்கு இனிமையைத் தருவதில்லை. அதுமட்டுமல்லாமல் அச்சுவைகளின் மருத்துவக் குணங்களை நாம் அறியாமலும் இருக்கின்றோம். இந்த அறுவகைச் சுவைகளும் உணவில் இருக்க வேண்டும் என்பதால்தான் நம் முன்னோர்கள் `அறுசுவை உணவை`உண்டு வாழ்ந்தனர். அறுசுவை உணவு என்பது இனிப்பு, புளிப்பு முதலான ஆறு வகைச் சுவைகளும் அடங்கியுள்ள உணவைக் குறிக்கும். இவ்வுணவு நமது உடலுக்குத் தேவையான சத்துகளை வழங்குவதோடு உடல்நலனைச் சமமாக வைத்திருக்கவும் உதவுகின்றது. ஆறு வகைப்பட்ட சுவைகளும் நம் உடல் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுகின்றன. இனிப்புச் சுவை தசையை வளர்க்கின்றது. புளிப்புச் சுவை கொழுப்பை வழங்குகிறது. துவர்ப்புச்சுவை இரத்தத்தைப் பெருக்குகின்றது. கசப்புச் சுவை நரம்புகளைப் பலப்படுத்துகின்றது. காரச் சுவை எழும்புகளை வளர்க்கின்றது. இவ்வாறு ஒவ்வொரு சுவையும் நமது உடல் ஆரோக்கியத்திற்கு அவசியமாகின்றது. ஆனால், இன்று நாம் உண்ணும் உணவில் ஒரு சில சுவைகளையே அதிகம் பயன்படுத்துகின்றோம். அதனால்தான் பல நோய்கள் நம்மைத் தாக்குகின்றன. பொதுவாக இனிப்புச் சுவையை அனைவரும் விரும்புகின்றோம். இது தசை வளர்ச்சிக்கு உதவுகிறது. நாம் இனிப்பை அதிகமாகப் பயன்படுத்தும் போது நமது தசைகள் நன்கு வளர்ச்சி அடைந்து உடல்பருமனைத் தோற்றுவிக்கிறது. உடல் பருமனால் நம்மில் பலர் பல துன்பங்களை அனுபவிக்கின்றனர். இவ்வாறான துன்பங்களில் இருந்து விடுதலை பெற வேண்டுமானால் அறுசுவைகளையும் நமது அன்றாட வாழ்வில் பயன்படுத்துவது அவசியமாகும். |
Saturday, July 08, 2006
தமிழ் கற்போம்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment