Thursday, October 26, 2006

சிற்றுரை

சிற்றுரை எழுதுதல் எப்படி?

சிற்றுரை என்பது தனி ஒருவரின் பேச்சு / உரை / சொற்பொழிவு ஆகும்.

பின்பற்ற வேண்டியவை :

  • அவையோர்க்கு வணக்கம் கூறுதல்
  • தலைப்பை அறிமுகம் செய்தல்
  • தலைப்புக்கான விளக்கம் கூறுதல் + தலைப்பை அணுகும் விதம்
  • ஒவ்வொரு கருத்தையும் விளக்குதல் -(மேற்கோள்கள், இனிய தொடர்களுடன்)
  • கூறிய கருத்துகளைத் தொகுத்துரைத்தல் (முடிவுரை)
  • நன்றி கூறி முடித்தல்
  • சிற்றுரையில் மேற்கூறிய இந்த ஆறு செய்திகளும் இடம்பெறுதல் வேண்டும்.



    உடல்நலம் பேணுவதின் அவசியம்

    (மாதிரிச் சிற்றுரை)



    பெருமதிப்பிற்குரிய அவைத்தலைவர் அவர்களே! இவ்விழாவின் சிறப்பு விருந்தினர் அவர்களே! விழாவின் ஏற்பாட்டுக்குழு உறுப்பினர்களே! பெற்றோர்களே! பெரியோர்களே! மாணவச் செல்வங்களே! உங்கள் அனைவர்க்கும் எனது முதற்கண் வணக்கம்!


    இன்று நான் பேசவிருக்கும் தலைப்பு உடலோம்புதலின் அவசியம் ஆகும். உடலோம்புதல் என்றால் என்ன என்பதை முதலில் பார்ப்போம். உடலை நலத்துடன் பாதுகாப்பது உடலோம்பல் ஆகும். நாம் ஏன் உடலைப் பாதுகாக்க வேண்டும்? உடலைப் பாதுகாக்காவிட்டால் உடல் கெட்டு விடும்; நோய்கள் நம்மைத் தாக்கி அழிக்கும். எனவே, நாம் ஒவ்வொருவரும் உடல்நலனைப் பாதுகாப்பது அவசியமாகும்.


    நாம் நம் உடல்நலனை எவ்வாறு பாதுகாக்கலாம்? என்பதைப் பற்றி இப்போது பார்ப்போம். ஆரோக்கியமான உணவுகள், தகுந்த உடற்பயிற்சி, சுகாதாரமான வாழ்க்கைமுறை போன்றவற்றின் மூலம் நாம் நம் உடல்நலனைப் பாதுகாக்க முடியும்.


    முதலில் உணவுமுறைகள் நமக்கு எப்படி ஆரோக்கிய வாழ்வைத் தருகின்றன என்பதைப் பற்றிப் பார்ப்போம். மனிதன் உயிர்வாழ உணவு அவசியம். உணவில்லாமல் ஒருவனால் உயிர்வாழ முடியாது. நாம் பலவகையான உணவுகளை உட்கொள்கிறோம். அவற்றுள் நமக்கு நன்மை அளிக்கும் உணவுகள் பல உள்ளன. உதாரணமாக, காய்கறிகள், பழங்கள், கீரைகள் போன்றவை உடலுக்கு நன்மை தரக்கூடியன. இறைச்சி, கோழி, போன்ற எணணெய்யில் பொறிக்கப்பட்ட உணவுகள் உடலுக்குத் தீங்கு செய்கின்றன. எனவே, உடல்நலனைப் பேண விரும்புவோர் சத்துள்ள நல்ல உணவுகளை உட்கொள்வது நல்லது. இதனால்தான் நமது முன்னோர்கள் “நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்று கூறினார்கள்.


    அடுத்ததாக உடற்பயிற்சி. உடற்பயிற்சி உடல்நலனைப் பாதுகாப்பதற்குரிய சிறந்த வழியாகும். ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வதற்கு உடற்பயிற்சி செய்வது அவசியம். மெதுவோட்டம், நீச்சல்,யோகாசனம் போன்றவற்றை நாம் மேற்கொள்ளலாம். மேலும், காலை, மாலை இருவேளைகளிலும் எளிய நிலையில் உள்ள உடற்பயிற்சிகளைச் செய்வது நல்லது. அதனால்தான் நமது அரசாங்கமும் பள்ளிகளிலும் உயர்கல்வி நிலையங்களிலும் உடற்பயிற்சியைக் கட்டாயப் பாடமாக ஆக்கியுள்ளது. அதுமட்டுமன்றி முதியோர்களுக்கேற்ற மெதுநடை, எளியநிலை உடற்பயிற்சிகள் போன்றவற்றைச் செய்ய ஊக்குவித்து வருகின்றது.எனவே, உடற்பயிற்சி என்பது உடல்நலனைப் பாதுகாக்கும் என்பதால் நாம் அதனைத் தவறாது பின்பற்றுவது அவசியமாகும்.


    இதுபோன்றே ஆரோக்கியமான வாழ்க்கை முறையும் உடலோம்புவதில் பெரும்பங்காற்றுகிறது. “சுத்தம் சுகம் தரும்” என்பார்கள். ஆகவே, நாம் அனைவரும் சுகாதாரமான வாழ்க்கை வாழ வேண்டும். சுகாதாரமான வாழ்க்கை என்பது சுத்தத்தைக் கடைப்பிடிப்பதைக் குறிக்கிறது. நாம் உண்ணும் உணவு, உடுக்கும் உடை, இருக்கும் வீடு என்ற எல்லா நிலையிலும் சுத்தத்தைப் பேண வேண்டும். அசுத்தமான சூழ்நிலை நோயை உருவாக்கும். அதனால்தான் “கூழானாலும் குளித்துக் குடி. கந்தையானாலும் கசக்கிக் கட்டு” என்று முன்னோர் கூறினர். ஆகவே, உடல்நலன் பேண வேண்டுமென்றால் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைக் கட்டாயம மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு மேற்கொண்டால் நம் வாழ்க்கை ஒளிமயமாகத் திகழும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.


    எனவே, உடல்நலன் பேணுவோர் அனைவரும் சத்துளள உணவுகளை உட்கொள்வதோடு ஆரோக்கியமளிக்கும் உடற்பயிற்சிகளையும் கட்டாயம் மேற்கொள்ள வேண்டும். மேலும், சுகாதரமான வாழ்க்கை முறையையும் பின்பற்றும் போது நமது உடல்நலன் பாதுகாக்கப்படும். ஆகவே, நாம் அனைவரும் வாழ்க்கையை வளமாக்க உடலோம்புவதில் அக்கறை செலுத்துவோம்!


    இதுவரை எனது உரையைச் செவிமடுத்த உங்கள் அனைவர்க்கும் எனக்கு இந்த அரிய வாய்ப்பினை வழங்கிய ஏற்பாட்டுக் குழுவினருக்கும் நன்றி கூறி எனது உரையை முடிக்கின்றேன். நன்றி! வணக்கம்!


    1 comment:

    Kirtinath said...

    நன்றி.